இந்திய ராணுவத்தின் பாதுகாப்பை உலக நாடுகளுக்கு பறைசாற்றிய ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா கொண்டுவரப்பட்ட நாள் இன்று.
உலகில் சக்தி வாய்ந்த ராணுவத்தைக் கொண்ட, நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. நவீன ஆயுதங்களும், அதிவிரைவான போர் விமானங்களும் தான், ஒரு நாட்டின் ராணுவ பலத்தை, தாங்கி நிற்கும் பாதுகாப்பு தூண்கள். அந்த வகையில், பிரான்ஸ் நாட்டில் இருந்து, வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள், இந்தியா வந்தடைந்து இன்றுடன் ஓராண்டை நிறைவுச் செய்கின்றன.
மணிக்கு 2 ஆயிரம் கி.மீ வேகம்
ஹரியானாவில் உள்ள அம்பாலா ராணுவப் படைத்தளத்தில், கடந்த ஜூலை 29-ம் தேதி, 5 ரஃபேல் போர் விமானங்கள் தரையிறங்கின. ரஃபேல் விமானத்தில் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால், 3 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். அதேபோல், சுமார் 25 டன் வரை எடையை தாங்கி பறக்கும் வல்லமையும் கொண்டது. மணிக்கு அதிகப்பட்சமாக 2 ஆயிரத்து 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் ரஃபேல் விமானங்கள் இந்திய படையில் இணைக்கப்பட்டது அண்டை நாடுகளின் கண்களை உறுத்தியது.
இத்தகைய சக்தி வாய்ந்த ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வருவதற்கு, அடித்தளமிட்டது காங்கிரஸ் ஆட்சியில் தான். கடந்த 2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது, பிரான்ஸிடமிருந்து 126 ரபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. 2012-ம் ஆண்டு இதற்கான ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டது. 18 ரஃபேல் விமானங்களை பிரான்ஸின் டசால்டு நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யவும், மீதமுள்ள விமானங்களை, டசால்டு நிறுவனத்துடன் இணைந்து, பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் விமான நிறுவனத்திலேயே தயாரிக்கவும் திட்டமிடப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நுழைந்த ரஃபேல்
ஆனால் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றம், அனைத்தையும் மாற்றி அமைத்தது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், ரஃபேல் விமானங்கள் வாங்குவதற்கான, ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டது. , 126 ரபேல் போர் விமானங்களுக்குப் பதிலாக, பறக்கத் தயாரான நிலையில் உள்ள 36 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவுசெய்தது. 2016-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு சென்ற பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கிடையே இறுதி செய்யப்பட்ட, ரஃபேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதில் 36 விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க, இந்தியாவின் சார்பில் ஒப்புக்கொள்ளப்பட்டு, 15 சதவீத முன்பணமும் செலுத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால், ஒப்பந்தம் வெளியான சில மாதங்களிலேயே, காங்கிரஸ் கட்சி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ரஃபேல் ஒப்பந்தத்தில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு நிறுவனமான, டி.ஆர்.டி ஒ.வுக்கு பதில், தனியார் நிறுவனமான, ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம், ரபேல் போர் விமானங்களை, வாங்குவதற்கான இந்திய பங்குதாரராக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் வலியுறுத்தலை அடுத்து, மாநிலங்களவையில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சி.ஏ.ஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே பிரான்ஸ் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஃபேல் போர் விமானங்களை பெற்றுக்கொண்டார். விமானங்களுக்கு சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, இந்திய வானுக்கு மின்னல் வேகத்தில் வந்து சேர்ந்தன ரஃபேல் விமானங்கள். குடியரசு தின அணிவகுப்பின் போது, கம்பீரமாக வானில் பறந்து வட்டமிட்ட ரஃபேல் விமானங்கள், இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு நம் நாட்டின் ராணுவ பலத்தை பறைச்சாற்றின.









