அரக்கோணம் அருகே ஓடும் பள்ளிப் பேருந்தில் இருந்து புகை வந்ததையடுத்து, மாணவர்களை உடனடியாக கீழே இறக்கிவிட்டு ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவ, மாணவிகளை அவர்கள் வீட்டிலிருந்தே அழைத்து வர பேருந்து வசதி இந்தப் பள்ளியில் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை சேந்தமங்கலம் பகுதியில் இருந்து சுமார் ஐந்து மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சேந்தமங்கலம் ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது, பள்ளிப் பேருந்தில் இருந்து புகை வருவதைக் கண்ட சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு பேருந்தில் இருந்த ஐந்து மாணவ, மாணவிகளுடன் கீழே இறங்கிவிட்டார். இதன் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து சம்பவம் குறித்து அரக்கோணம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த பேருந்தை அணைத்தனர்.
ஓட்டுநரின் துரித முயற்சி காரணமாக மாணவர்கள் எந்தவித காயமும் இன்றி உயிர்தப்பினர்.
-ம.பவித்ரா








