மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் கோயுரு மண்டலத்தில் உள்ள மாம்பா கிராமத்தில் மாவோ யிஸ்ட் நடமாட்டம் அதிகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, மாவோயிஸ்ட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். போலீசாரும் பதிலுக்கு சுட்டனர். இரு தரப்புக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இன்று காலை நடந்த இந்த துப்பாக்கிச் சண்டை யில், 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பலர் காயமடைந்துள்ளனர். இந்த சண்டையில் பெண் மாவோயிஸ்ட்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
தெலங்கானாவை சேர்ந்த சண்டே கங்கையா, சண்டே கங்கம்மா ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. போலீசார், சண்டை நடந்த இடத்தில் இருந்து ஏகே -47 வகை துப்பாக்கி உட்பட பல்வேறு ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர், அந்தப் பகுதியில் மாவோயிஸ்டுகள் மேலும் இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க, ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டையும் நடைபெற்றது..







