குருகிராமை சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்ட ஆறு நாட்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வருபவர் 56 வயதான செவிலியர் லாஜ்வந்தி. இவர் 20 வருட பணி அனுபவம் கொண்டவர். இந்தியாவில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், லாஜ்வந்திக்கும் ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆறு நாட்களுக்கு பிறகு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் லாஜ்வந்தியின் கணவர் லால் சிங், தடுப்பூசி போட்டதால்தான் மனைவி உயிரிழந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் மரணத்துக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்றும், பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே உண்மை தெரியவரும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தடுப்பூசிக்கும், உயிரிழப்புக்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







