துண்டுச் சீட்டு இல்லாமல் தம்முடன் நேருக்கு நேர் விவாதிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயாரா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
கோவை செல்வபுரம் மற்றும் ராஜ வீதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களின் தேவை அறிந்து அதிமுக அரசு செயல்படுவதாகக் குறிப்பிட்டார். கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும், மின் மிகை மாநிலமாக தமிழகம் உள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின், உண்மையிலேயே கிராம சபை கூட்டத்தை நடத்தி இருந்தால், கோவையில் குறையை சுட்டிக்காட்டிய பெண்ணுக்கு அவர் பதில் அளித்திருப்பார் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். ஊழலுக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர்தான் என்று குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை எதிர்கொள்ள சக்தியற்ற தலைவராக ஸ்டாலின் உள்ளதாக விமர்சித்தார்.
பின்னர் கோவை குனியமுத்தூரில் திறந்தவேனில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் தமிழகம் தலைநிமிர்ந்துள்ளதாகக் கூறினார். உணவு தானிய உற்பத்தியில் தமிழகத்தை, அதிமுக ஆட்சி தன்னிறைவு அடையச் செய்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துண்டுச்சீட்டு இல்லாமல் தம்முடன் நேருக்கு நேர் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா என்று சவால்விடுத்தார்.







