”கிரிக்கெட்டில் சிவகார்த்திகேயன் என்னை அவுட்டாக்கிவிட்டு சாரி ப்ரோ என சொல்வார்..” என மாவீரன் இசைவெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. இந்த படத்தை ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.
தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
இதனிடையே, இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக ’வண்ணாரபேட்டையில’ என்கிற இரண்டாம் சிங்கிள் பாடல் கடந்த ஜூன் 14-ம் தேதி அன்று வெளியானது. இப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் மாவீரன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கதையின் நாயகன் சிவகார்த்திகேயன், இயக்குனர் மிஷ்கின் , இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகை சரிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்ததாவது..
“ இந்த படக்குழுவில் இருப்பவர்கள் அனைவரும் எனக்கு மிகவும் பரிட்சயமானவர்கள். குறிப்பாக சிவகார்த்திகேயனை சொல்ல வேண்டும். எஸ்.கே.யும் நானும் நிறைய இரவுகளில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். அவர் பாலில் நான் அடிக்கடி அவுட் ஆகி இருக்கிறேன். பாலை மெதுவாக போடுங்கள் என்று சொல்வேன். கேட்க மாட்டார். வேகமாக தான் பால் போடுவார். அவுட் ஆக்கி விட்டு சாரி ப்ரோ என்று சொல்வார். அவருக்கு என்னுடைய நன்றி. காரணம் என்னுடைய பரியேறும் பெருமாள் தொடங்கி மாமன்னன் வரை எல்லா படைப்புகளையும் பார்த்து பாராட்டியிருக்கிறார்.
படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இருந்து கவனித்து அதற்காக வாழ்த்து சொல்வதோடு மட்டுமல்லாமல் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது நடக்கும் என்று நம்பிக்கை தருவார். வாழை படத்திற்கும் இப்போதே அவர் வாழ்த்து சொல்லி விட்டார். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி .
யாரிடமாவது கேள்வி கேட்க சொன்னார்கள் நான் எஸ்.கே.யிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான பதில் எனக்கு படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போது கிடைத்து விட்டது. டிரெய்லர் மிகவும் அற்புதமாக இருந்தது. நாம் எஸ்.கே சாரை எப்படி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டமோ அப்படி ஒரு படமாக மாவீரன் இருக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. படத்தில் மிஷ்கின் சார் இருக்கிறார். அவரையும் எஸ். கே.சாரையும் எதிர் எதிராக பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். பகத் சாரும் வடிவேலுவும் எப்படி எதிரெதிராக இருந்தார்களோ அப்படி இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் படத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது.
மிஷ்கின் சாரிடம் இதுவரை டெரரான ரத்தமும் சதைமான படைப்புகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் படத்தில் அவர் வேறு மாதிரி நடித்துள்ளார். இந்த இரண்டு பேருடைய காம்போ ஆடியன்ஸுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் சரிதா மேம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தான் அவரை நான் சந்தித்தேன். அவர் என்னுடைய கனவு நாயகி என்று சொல்லலாம். ரொம்ப நாளாக நான் சொல்லிக் கொண்டே இருந்தேன் அவரை எப்படி சந்திக்கிறது அவர் எங்கு சென்றார் என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தேன். எப்படி வடிவேல் சாரின் போட்டோவை வீட்டில் மாட்டும் அளவுக்கு அவரின் ரசிகனாக இருந்தேனோ அதேபோலத்தான் சரிதாவுக்கும் நான் அப்படி ஒரு ரசிகனாக இருந்தேன். அவர் இன்னும் அப்படியே இருக்கிறார். எனது படத்தைப் பார்த்துவிட்டு எனக்கு போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு நான் அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் நான் அதை எதிர்பார்க்கவே இல்லை.” என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.







