” CSK மாதிரி துடிப்பான டீமுடன் இணைந்து ஹிட் அடிப்பது ரொம்ப ஈசி..” என மாவீரன் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேட்டி தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. இந்த படத்தை ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.
தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
இதனிடையே, இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக ’வண்ணாரபேட்டையில’ என்கிற இரண்டாம் சிங்கிள் பாடல் கடந்த ஜூன் 14-ம் தேதி அன்று வெளியானது. இப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் மாவீரன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கதையின் நாயகன் சிவகார்த்திகேயன், இயக்குனர் மிஷ்கின் , இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகை சரிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்ததாவது..
“ என் வாழ்கையில் எங்க அப்பா தான் எனக்கு மாவீரன். வேலை பார்த்த சேர்லயே உயிரை விட்டவர் அவர். அதனால் அவர் மாவீரன். உழைப்பின் மேலேயும் மக்கள் மேலையும் மக்கள் மேலேயும் நம்பிக்கை இருக்கு படம் வெற்றி ஆகும். நெகட்டிவா சொல்கிற எந்த ஒரு விஷயத்தையும் காதில் வாங்காதீங்க என்ன மாதிரி ஒரு சின்ன குல்லா வாங்கி போட்டு காத மறைச்சுக்கோங்க.
வெற்றி தோல்வி இரண்டுமே மாறி மாறி வரும் ஆனா எந்த ஒரு நிலை வந்தாலும் நீங்க ஓடிட்டே இருக்கீங்களா அப்படின்றது தான் முக்கியம். இந்த படத்துல ஸ்டன்ட் சீக்வன்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கும் நீங்களே அதை உணர்வீங்க.
மாவீரன்னா ஆண்கள் மட்டும் இல்லை பெண்களும்தான். இன்னொரு வீட்டுக்கு போய் வேலை செய்யும் பெண்கள், குழந்தைக்கு உயிர் கொடுக்கும் அம்மா , அவங்களை ஒழுங்கா பாத்துக்குற எல்லார்மே மாவீரன் தான் “சவாலை எதிர்கொள்ள தயாரானவன் தான், சாதிக்க தயாரானவன்.
என்னை நீங்கள் ரசிப்பதற்கு முன் உங்கள நீங்க ரசிங்க , உங்க குடும்பத்தை நீங்க ரசிங்க. மெரினா படத்தின் ஆடியோ லான்ச் மெரினா பீச்சில் வெறும் 50 பேர் முன்னிலையில் நடந்தது. ஆனா இப்போ இவ்வளவு ரசிகர்கள் முன்னிலையில் எனது இருபதாவது படத்தின் ஆடியோ லான்ச் நடக்கும் பொழுது எமோஷனலாக உள்ளது. ஒரு படம் Young டீமோட ஜாயின் பண்ணி ஹிட் அடிக்கிறது ஈசி.. சிஎஸ்கே மாதிரி ” என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.




