இலங்கையில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு : செந்தில் தொண்டமான் திருச்சியில் பேட்டி..!!

இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்வோம் என இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி…

இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை விரைவில்
மேற்கொள்வோம் என இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் மிளகுபாறையில் உள்ள ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில தலைவர் ஒண்டிராஜ், இல்லத்திற்கு அவர் சென்றார். அவருக்கு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து சால்வை அணிந்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செந்தில் தொண்டமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

” ஒவ்வொரு பாதையில் நமது பயணங்கள் இருந்தாலும் தமிழர்கள் என்ற கலாச்சாரத்தில் ஒன்றாக தான் இருப்போம், 15 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு பாதுகாப்புக்காக அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அனைவரும் பயணிப்போம், உழைப்போம், உதவிகளும் செய்து கொண்டு இருப்போம்.

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் 25 ஆண்டுகளாக கைது நடவடிக்கை தொடரும் போது, ஒவ்வொரு முறையும் நாங்கள் தான் அரசிடம் பேசி அவர்களை விடுதலை செய்து வருகிறோம். தமிழக மீனவர்கள் யாரும் வேண்டுமென்று இலங்கை கடல் பகுதிக்கு வருவதில்லை, கடல் எல்லை இல்லாததால், மீன்களைத் தேடி வரும்போது தவறுதலாக வருகிறார்கள். அந்த அடிப்படையில் தொடர்ந்து அவர்களை விடுதலை செய்து கொண்டிருக்கிறார்கள், ஆயிரக்கணக்கான படகுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள், தொடர்ந்து அந்த வேலையை செய்வோம்.

இலங்கை தமிழர்கள் குடியுரிமை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் தான் விளக்கம் கூற வேண்டும், இது சம்பந்தமாக சென்னையில் நடைபெற உள்ள செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் கூற உள்ளேன். இலங்கை வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்தது குறித்து பழ.நடேசன் கூறிய கருத்திற்கு அவரிடம் தான் கேட்க வேண்டும். இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்வோம். இலங்கை முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வருகிறது. அதனை சரி செய்து வருகிறோம்” என செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.