மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சமாதிக்கு நேரில் சென்று நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார்.
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார். இவர், கடந்த 29 ஆம் தேதி உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன்றி மரணமடைந்தார். அவருடைய திடீர் மறைவு அன்று திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கர்நாடக முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் வாதிகள், திரைத்துறையினர் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர் தந்தை ராஜ்குமாரின் நினைவிடம் அருகில் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் புனீத் ராஜ்குமார் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். பிறகு, புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி, புனித்தின் சகோதரும் நடிகருமான சிவராஜ்குமாரை ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், ‘புனித்தின் மறைவை நம்ப முடியவில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு அவருடன் பேசியிருந்தேன். சிறந்த மனிதர். அவர் மறைவு திரையுலகுக்கு பெரும் இழப்பு. அவருடைய நல்ல விஷயங்கள் எப்போதும் நினைவு கூறப்படும். பெங்களூரு வந்தால் என்னை சந்திக்கவேண்டும் என்று கூறினார். நான் இப்போது பெங்களூருவில் இருக்கிறேன். ஆனால் அவரைப் பார்க்க முடியவில்லை’ என்று உருக்கமாகக் கூறினார்