சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சிவாஜி கணேசனின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் சென்னை அடையாறில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிலை மற்றும் உருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அப்போது நடிகர் பிரபு, விக்ரம் பிரபு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமது நடிப்பாற்றலால் உலகையே வியக்க வைத்து – வரலாறாக வாழ்ந்து மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது பிறந்தநாளில் அவரது நினைவுகளைப் போற்றுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.