சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் சக நண்பனின் திருமணத்திற்கு செய்தித்தாள் வடிவில் பேனர் வைத்து நண்பர்கள் அசத்திய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் பிரவீன்ராஜ். இவருக்கும் அருகிலுள்ள அதிகரை கிராமத்தை சேர்ந்த பிரவீனா என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக அவரது நண்பர்கள் வைத்த வரவேற்பு பேனர் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது சாதாரண பேனரை போன்று அல்லாமல் வித்தியாசமாக செய்தித்தாள் வடிவில் பேனர் வைத்துள்ளனர். அதில் தலைப்புச் செய்தி என்று பிரவீனாவின் மனதை திருடிய குற்றத்திற்காக பிரவின்ராஜிற்கு திருமண சட்டப்படி ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது என்றும், கல்யாண பந்தலில் கலவரம் செய்த மூன்று இளைஞர்களுக்கு கறிக்கஞ்சி கிடையாது சிவில் கோர்ட் தீர்ப்பு கறிக்கஞ்சி சாப்பிட்டு காரம் காதிற்கு ஏறி கதறும் கடைசி விவசாயி என்றும் வித்தியாசமான முறையில் கட் அவுட் வைத்துள்ளனர்.
மேலும் கல்யாண மாலை என்று தலைப்பிட்டு மணமகன் தேவை விளம்பரம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனை பேனரோடு நிறுத்திக் கொள்ளாமல் போட்டோ பிரேமாகவும் செய்து மணமக்களுக்கு திருமண பரிசாகவும் அளித்துள்ளனர். தற்போது இந்த பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.








