சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தலையில் கோழி இறகை சூடிக் கொண்டு உடம்பு முழுவதும் சேறும், சகதியும் பூசிக்கொண்டு பக்தர்கள் கோவிலை வலம் வரும் வினோத வழிபாடு நடைபெற்றது.
சிங்கம்புணரி அருகே கீழக்குறிச்சிபட்டியில் அமைந்துள்ளது ஏழூர் அம்மன் கோவில். இக்கோவிலானது சுற்றுவட்டாரத்தை சேர்ந்த செல்லியம்பட்டி, மேட்டாம்பட்டி, தேவம்பட்டி, கருப்புகுடி, அம்மன்கோவில்பட்டி, வார்பட்டி, கொள்ளுபட்டி உள்ளிட்ட ஏழு கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு பாத்தியப்பட்டதாகும்.
இந்த கோவில் திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா தொடங்கிய நாள் முதல் தினமும் கும்மியடித்து ஏழு கிராமங்களை சேர்ந்த பெண்கள் அம்மனை வழிபட்டனர்.
விழாவின் இறுதி நாளான இன்று மக்கள் அனைவரும் பொங்கலிட்டும்,ஆடு,கோழி உள்ளிட்டவைகளை பலியிட்டும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து பல கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை அணிந்து தலையில் கோழி இறகுகளை சூடி உடம்பில் சேறும்,சகதியும் பூசிக்கொண்டு கோவிலை வலம் வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
மேலும் கரும்பு தொட்டில் கட்டியும் வேண்டுதலை நிறைவேற்றினர்.இத்திருவிழாவில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
—-வேந்தன்







