சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்காலிகமாக அஜித் (29) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த கோயிலுக்கு நேற்று முன்தினம் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73) என்பவர் தனது மகளுடன் தரிசனம் செய்ய காரில் வந்தார். சிவகாமியால் நடக்க முடியாத நிலையில் அஜித் வீல்சேர் கொண்டு வந்து கொடுத்தார். அப்போது கார் சாவியை அஜித்திடம் கொடுத்த பெண்கள் காரை பார்க் செய்யுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது.
அஜித்திற்கு கார் ஓட்ட தெரியாததால் அருகில் இருந்தவரிடம் சாவியை கொடுத்து காரை பார்க் செய்ய கூறினார். இதையடுத்து சிவகாமி சாமி தரிசனம் முடிந்து காரில் புறப்பட்ட போது காரின் பின் சீட்டில் கட்டைப்பையின் அடியில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை மாயமானது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிவகாமி அஜித்திடம் விசாரித்த போது உரிய பதில் இல்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து சிவகாமி திருப்புவனம் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அஜித் உள்ளிட்ட சிலரிடம் நேற்று கோயில் அருகே வைத்து விசாரணை செய்தனர். மேலும், அஜித்குமாரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை செய்தபோது அஜித் மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஜித் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அஜித்தின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, போலீசார் கடுமையாக தாக்கியதால்தான் அஜித் உயிரிழந்ததாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காவல் நிலையத்தில் அஜித் கடைசியாக பேசியது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, போலீசார் அஜித்தை தொடர்ந்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அஜித், “நான் இறந்து விடுவேன்” என கதறி அழுததாக சொல்லப்படுகிறது. அப்போது போலீசார் அவரின் வாயில் மிளகாய்பொடியை போட்டதாக தெரிகிறது. அப்போது அஜித் “தண்ணீர் வேண்டும் நான் செத்துருவேன் போல” என்று கதறி அழுததாக சொல்லப்படுகிறது. இதனை கண்டுகொள்ளாத போலீசார் அவருக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் தாக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.








