வெண்கலப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது. அரையிறுதியில் தாய் சூ யிங்கிடம் தோல்வி அடைந்த…

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது. அரையிறுதியில் தாய் சூ யிங்கிடம் தோல்வி அடைந்த இந்தியாவின் பி.வி.சிந்துவும், சென் யூபேயிடம் தோல்வி அடைந்த சீனாவின் ஹி பிங்ஜியோவும் மோதினர்.

தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி.சிந்து, முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றினார். 2வது செட்டில் இருவரும் ஆக்ரோஷமாக விளையாடியதால் போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இருப்பினும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, 21-15 என்ற கணக்கில் 2வது செட்டை கைப்பற்றினார். இதன் மூலம், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து, வெண்கலப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து, தற்போது வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும், 2வது இந்தியர் என்ற சாதனையையும் பி.வி.சிந்து படைத்துள்ளார்.

2008, 2012ல் முறையே வெண்கலம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமாரே, ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்ற இந்தியர் ஆவார். தற்போது சிந்து 2016 ரியோ ஒலிம்பிக் மற்றும் 2020ம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

வெண்கலம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சிந்துவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் பெருமை பி.வி.சிந்து என புகழாரம் சூட்டியுள்ளார்.

இதே போல், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.