மேகதாது விவகாரத்தில் தமிழர் நலனை காப்பதற்காகவே வரும் 5ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி துரைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த வி.பி.துரைசாமி, நீண்ட கால பிரச்னையான மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையை தீர்த்து வைத்து பிரதமர் மோடி, சமூக நீதியை காத்துள்ளதாகக் கூறினார்.
மாணவர்கள் மீதுள்ள அக்கறையால் அனைவருக்கும் சமமான வாய்ப்பை பிரதமர் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சமூக நீதி என்பது ஒரு கட்சிக்கோ ஒரு குடும்பத்தாருக்கோ சொந்தமில்லை என்றும் திமுக சொந்தம் கொண்டாடுவது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.
ஆட்சி அமைத்து 85 நாட்கள் ஆகியும் பட்ஜெட் தாக்கல் செய்யாமல் இருக்கும் ஒரே கட்சி திமுக தான் எனவும் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்து தமிழர் மீது நீங்கள் கொண்ட அக்கறையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
மேலும், மேகதாது விவகாரத்தில் தமிழர் நலனை காப்பதில் பாஜக நேர்கோட்டில் உள்ளது என்பதை நிரூபிக்கவே, 5ஆம் தேதி தஞ்சையில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி துரைசாமி தெரிவித்தார்.







