சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ள நிலையில், காணாமல் போன 105 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி சிக்கிம் இமயமலையில் உள்ள லோனாக் பனிப்பாறை வெடித்து, ஏரியின் ஒரு பக்கம் உடைந்தது. இதன் காரணமாக டீஸ்டா நதியின் நீர் மட்டம் உயர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளை மூழ்கடித்தது. குறிப்பாக 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த வெள்ளத்தில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர் 105 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் சுமார் 7,000 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 1,300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதனிடையே காங்டாக் சென்றடைந்த ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே ஒருங்கிணைந்த நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகளுக்காக அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
லாச்சனில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மங்கன் மாவட்டத்தில் உள்ள ரிங்கிம் ஹெலிபேடிற்கு வந்து சேர்ந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
சிக்கிமில் உள்ள லாச்சுங்கில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்திய ராணுவம் மருத்துவ உதவி, உணவு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, மாங்கனில் உள்ள நிவாரண முகாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார்.







