பாகிஸ்தானில், சீக்கிய மன்னா் மகாராஜா ரஞ்சித் சிங் சிலை, பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பிற மத வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதும், பிற மதத்தைச் சோ்ந்த இளம் பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூர் கோட்டை முன்பு குதிரையில் கம்பீரமாக அமர்ந்திருப்பது போல வைக்கப்பட்டு இருந்த சீக்கிய மன்னர், மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலை, நேற்று அடித்து நொறுக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-லபாயக் என்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இதைத் தகா்த்தனா். அந்த சிலையை அவர்கள் உடைத்து நொறுக்கும் காட்சிகள், வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவின. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிலரை கைது செய்துள்ளனர்.
இந்த சிலை கடந்த 2019-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அந்த சிலை கடந்த ஆண்டும் உடைத்து சேதப்படுத்தப்பட்டு, பின்னர் சரி செய்யப்பட்டது. ராஜா ரஞ்சித் சிங் சிலை தகா்க்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறும்போது, ‘பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. அவர் களின் வழிபாட்டு தலங்கள், கலாச்சார சின்னங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. இது அங்குள்ள சிறுபான்மையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவா்களைக் காக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.










