திருவாரூரில் மாமனாரை மருமகன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மாணிக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் மணிமேகலைக்கும் வேடம்பூர் பகுதியை சேர்ந்த சிவானந்தம் என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மாதங்களுக்கு பிறகு சிவானந்தம் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மணிமேகலையிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதில், கோபித்துக்கொண்டு அவர் தனது தந்தையின் வீட்டிற்கு சென்று வசித்துள்ளார்.
சிவானந்தம் பலமுறை மணிமேகலையை வீட்டிற்கு வருமாறு அழைத்தும் அவர் செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில், மாமனார் வீட்டிற்கு வந்த சிவானந்தம், தனது மனைவியை வீட்டிற்கு அனுப்புமாறு கூறி மது போதையில் தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சிவானந்தம் அவரது மாமனார் நாகராஜனை கீழே தள்ளிவிட்டதில் பலத்த காயம் அடைந்துள்ளாா். இதையடுத்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சிவானந்தத்தை கைது செய்தனர்.







