அறிமுக டெஸ்ட்டில் அசத்தல் சதம்: மிரட்டினார் ஸ்ரேயாஸ்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயர் அசத்தலாக சதம் அடித்து மிரட்டினார். நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயர் அசத்தலாக சதம் அடித்து மிரட்டினார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுக வீரராக களமிறங்கினார். அவருக்கு டெஸ்ட் அணிக்கான தொப்பியை, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வழங்கினர்.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வாலும் சுப்மன் கில்-லும் களமிறங்கினர். மயங்க் அகர்வால், 13 ரன்களிலும் கில் 52 ரன்களிலும் புஜாரா 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரஹானே 35 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் போல்டானார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யரும், ஜடேஜாவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இருவரும் சிறப்பாக ஆடி, அரைசதம் அடுத்தனர். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் , ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்தனர் . நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் 75 ரன்களும் ஜடேஜா 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் ஜேமிசன் 3 விக்கெட்டுக்களையும் டிம் சவுதி ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது . சிறப்பாக ஆடிய ஜடேஜா, டிம் சவுதி பந்தில் போல்டானார். அடுத்து விக்கெட் கீப்பர் சஹா வந்தார். மறுபக்கம் சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ், தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த அவருக்கு சக வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஹா, ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் சவுதி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து அஷ்வின் களமிறங்கினார். 96.1-வது ஓவரில் சவுதி பந்துவீச்சில்  ஆட்டமிழந்தார் ஸ்ரேயாஸ். அவர் 105 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. அஸ்வினும் அக்சரும் களத்தில் ஆடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.