நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடக்கும் டி-20 கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் ஆடும் லெவனில், அஸ்வின் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள், இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். இதில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இந்திய அணி, தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
நியூசிலாந்து அணியும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்றுள்ளது. இந்தப் போட்டியில் வென்றால்தான் அடுத்தச் சுற்றுக்கு செல்ல முடியும் என்பதால் இரு அணிகளுக்கும் இது வாழ்வா சாவா போட்டியாகும். அதனால் இன்றைய போட்டியில் இரு அணி வீரர்களுமே முழுமூச்சுடன் வரிந்துகட்டுவார்கள் என்று நம்பலாம். இதற்கிடையே இந்திய அணியின் ஆடும் லெவனில், அஸ்வினை களமிறக்க வேண்டும் என்று சிலரும் வருண் சக்கரவர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கட வேண்டும் என்று சிலரும் கருத்துக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் ஆடும் லெவனில், ரவிச்சந்திரன் அஸ்வின் கண்டிப்பாகக் களமிறக்கப்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, வருண் சக்கரவர்த்தி, சார்ஜா மைதானத்தில் சிறப்பாக விளையாடுவார். ஆனால், இன்றைய போட்டி நடக்கும் துபாய் மைதானத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. அதற்கு அஸ்வின் மட்டுமே சரியானவர். அதோடு, வருணுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் குறைவு. அஸ்வின் அனுபவம் வாய்ந்தவர் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்ப பந்துவீசுவதில் வல்லவர். அதனால் முக்கியத்துவம் கொண்ட இந்தப் போட்டியில் அஸ்வினை கண்டிப்பாக ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும் என்றார்.









