முக்கியச் செய்திகள் விளையாட்டு

டி-20 உலகக் கோப்பை: நியூசி. பந்துவீச்சாளரின் அதிரடி திட்டம், சமாளிக்குமா இந்திய அணி?

டி-20 உலகக் கோப்பைத் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும்.

இதில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இந்திய அணி, தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

நியூசிலாந்து தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்றுள்ளது. இதனால், இந்தப் போட்டியில் வென்றால்தான் அடுத்தச் சுற்றுக்கு எளிதாக நுழைய முடியும் என்பதால் இரு அணிகளுக்கும் இது வாழ்வா சாவா போட்டியாகும். அதனால் இன்றைய போட்டியில் இரு அணி வீரர்களுமே முழுமூச்சுடன் வரிந்துகட்டுவார்கள் என்று நம்பலாம்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சொதப்பினார்கள். அடுத்து வந்த சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா உட்பட யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கேப்டன் விராத் கோலி மட்டுமே பொறுப்புடன் ஆடினார். பந்துவீச்சும் மோசமாக இருந்தது. இருந்தாலும் இன்றைய போட்டியில், அணியில் அதிக மாற்றம் இருக்காது என்று தெரிகிறது.

நியூசிலாந்து அணியில் கப்தில், கேப்டன் கேன் வில்லியம்சன், நீஷம், பிலிப்ஸ், கான்வே ஆகியோர் ஃபார்மில் இருக்கின்றனர். பந்துவீச்சிலும் டிரெண்ட் போல்ட், டிம் சவுதி, சோதி என அனுபவ வீரர்கள் மிரட்டத் தயாராக இருக்கின்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர்கள் பந்துவீச்சில் மிரட்டியதை மறக்க முடியாது. இதனால் இவர்கள் இந்திய வீரர்களுக்கு கடும் சவால் கொடுப்பார்கள் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்நிலையில், நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் கூறும்போது, ‘இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிதி சிறப்பாக பந்துவீசினார். இடதுகை பந்துவீச்சாளரான அவர் வீசியதை போல என்னாலும் பந்துவீசி இந்திய வீரர்கள் விக்கெட்டை வீழ்த்த முடியும் என்று நம்புகிறேன். இந்திய அணியில் தரமான பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அதனால் தொடக்கத்திலேயே அவர்கள் விக்கெட்டை வீழ்த்துவதில் கவனம் செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர்களும் திட்டம் வைத்திருப்பதாகவே தெரிகிறது.

Advertisement:
SHARE

Related posts

சிவகளை அகழாய்வில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

Vandhana

டெல்லியில் அனல் காற்று: மின் பயன்பாடு அதிகரிப்பு

Halley karthi

’அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது’- நடிகர் சூர்யா

Halley karthi