ராஜஸ்தானில் பெரியம்மாவை கொலை செய்து, உடலை 10 துண்டுகளாக்கி சூட்கேசில் எடுத்துச் சென்று நெடுஞ்சாலையில் வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அனூஜ் சர்மா என்பவர், சரோஜ் சர்மா என்ற தனது பெரியம்மாவை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அனூஜ் சர்மா முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், அனூஜ் சர்மா தனது பெரியம்மாவை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டு, காணாமல் போனதாக நாடகமாடியது தெரியவந்தது.
மேலும், பளிங்கு கற்களை வெட்டும் இயந்திரத்தைக் கொண்டு உடலை 8 முதல் 10 துண்டுகளாக்கி, அவற்றை சூட்கேசில் எடுத்துச்சென்று டெல்லி நெடுஞ்சாலையில் வீசியதும் தெரியவந்தது. அனூஜ் சர்மா சூட்கேஸ் எடுத்து செல்வது சிசிடிவியில் பதிவாகி உள்ள நிலையில், கொலை செய்யப்பட்ட சரோஜ் சர்மாவின் உடல் பாகங்கள் சிலவற்றை போலீசார் மீட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







