கேரளாவில் பிரபல ராப் பாடகராக அறியப்படும் வேடன் என்கிற ஹிரந்தாஸ் முரளி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொச்சி திருக்காட்கரை காவல் நிலையத்தில் இளம்பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
அந்த புகாரில், ஹிரந்தாஸ் முரளி திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியதாக அந்த இளம் மருத்துவர் தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை சுமார் இரண்டு ஆண்டுகளாக, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் கேரள திரையுலகிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்புகார் குறித்த செய்தி வெளியானதில் இருந்து, பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர் பிரபல ராப் பாடகராக இருப்பதால், இந்த வழக்கு பொதுவெளிக் கவனத்தைப் பெற்றுள்ளது.
மேலும் காவல்துறையினர் இந்த வழக்கை விரைவாக விசாரித்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஹிரந்தாஸ் முரளி தரப்பில் இருந்து இதுவரை எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை.







