முக்கியச் செய்திகள் இந்தியா

குஜராத்தில் 22 சிவசேனை எம்எல்ஏக்கள்..! ஆட்சியை கவிழ்க்க முடியாது என சஞ்சய் ராவத் பேட்டி

குஜராத் மாநிலம், சூரத்தில் சிவசேனை எம்எல்ஏக்கள் 22 பேர் முகாம் போட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி வெற்றி பெறாது என்று சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா அமைச்சரும், சிவசேனை மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டே ஆளும் அரசுக்கு எதிராக கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரை கட்சித் தலைமையால் தொடர்புகொள்ள முடியவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவருடன் மேலும் 5 மாநில அமைச்சர்களும், 15-க்கும் மேற்பட்ட அக்கட்சியின் எம்எல்ஏக்களும் குஜராத் மாநிலம், சூரத் நகரில் அமைந்துள்ள ஹோட்டலில் தற்போது தங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், சிவசேனை எம்எல்ஏக்கள் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சிவசேனை எம்.பி.யான சஞ்சய் ராவத் கூறியதாவது:
மகாராஷ்டிராவில் ஆளும் அரசை கவிழ்க்க நடைபெறும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடந்தது போன்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி இங்கும் நடக்கிறது. சிவசேனை கட்சியில் விசுவாசிகள் நிறைந்திருக்கிறார்கள். ஆட்சியைக் கவிழ்க்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஏக்நாத் ஷிண்டே எங்கள் பக்கம் தான் இருக்கிறார். எங்கள் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அவர் முயற்சி செய்து வருகிறார். அவருடன் பேசாமல் நாங்கள் எதுவும் கூற முடியாது. நாங்கள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் பேசிவிட்டோம்.

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

சூரத்தில் உள்ள எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் மாநிலத்துக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் ஹோட்டலில் இருந்து வெளியேற அனுமதி மறுக்கப்படுகிறார்கள் என்றார் சஞ்சய் ராவத்.

22 சிவசேனை எம்எல்ஏக்கள் மட்டுமல்லாமல் 5 சுயேட்சை எம்எல்ஏக்களும் சூரத்தில் தங்கி உள்ளனர் என்று மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியான பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமேலவைத் தேர்தலில் போட்டியிட்ட 5 இடங்களிலும் பாஜக வென்றது. காங்கிரஸ் வேட்பாளர் சந்திரகாந்த் ஹந்தோர் தோல்வி அடைந்தது ஆளும் கூட்டணி அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இதனிடையே, மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவீஸ் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

சூரத்ததில் உள்ள சிவசேனை எம்எல்ஏக்கள் தற்போது அகமதாபாத் சென்றிருக்கலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிவசேனை முன்னாள் மூத்த தலைவரும், தற்போது பாஜகவில் உள்ளவருமான நாராயண் ராணே கூறுகையில், “இதுபோன்ற விஷயங்களில் கருத்து தெரிவிக்க முடியாது. சிவசேனை எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்” என்றார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிகரிக்கும் கொரோனா: கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

Halley Karthik

மே 5ம் தேதி முதல்வராகப் பதவியேற்கும் மமதா பானர்ஜி

Halley Karthik

2 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!

Ezhilarasan