திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் மட்டுமே இந்தியா சொந்தமாகும்; மகாராஷ்டிர முதல்வர் தாக்கரேவுக்கும், பிரதமர் மோடிக்கும் சொந்தமானதல்ல என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம், பிவான்டி நகரில் நடைபெற்ற பேரணியில் ஒவைஸி பேசியதாவது:
சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத் கைதின்போது மட்டும் பிரதமரிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அவரது கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நவாப் மாலிக்கை அமலாக்கத் துறை கைது செய்தபோது ஏன் பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனை, பாஜக ஆகிய கட்சிகள் எல்லாம் வாக்கு வங்கியை மட்டுமே பாதுகாக்க விரும்புகிறது. சிறுபான்மையின சமூகத்தினர் குறிவைக்கப்படும்போது இந்தக் கட்சிகள் எதிர்வினையாற்ற மறுக்கிறது.
பாஜக ஆட்சிக்கு வந்து எட்டு 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை பிரதமர் மோடியும், பாஜகவினரும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், பணவீக்கம் போன்ற பிரச்னைகளால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அவர்கள் உணரவில்லை. உண்மையில் இந்தியா என்பது திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு சொந்தமானதாகும். மற்றவர்கள் உரிமைகொண்டாடுவது போல் கிடையாது. மற்ற கட்சிகள் 600 ஆண்டுகால உதாரணத்தை கூருகிறது. நான் 65,000 ஆண்டுகளுக்கு முந்தைய உதாரணத்தை கூறுகிறேன். இந்த நாடு உத்தவ் தாக்கரே, சரத் பவார், ஒவைஸி, மோடி, அமித் ஷா ஆகியோருக்கு சொந்தமானதல்ல. திராவிடர்களும், ஆதிவாசிகளுக்குமே சொந்தமானதாகும்.
தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர், முஸ்லிம்கள் ஆகியோருக்கு நான் கூறிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், இதை புரிந்துகொள்ளுங்கள். நமக்காக உதவி செய்ய இந்த கட்சிகள் எல்லாம் ஒருபோதும் முன்வராது. அவைகளுக்கு வாக்கு வங்கி மட்டுமே முக்கியமாகும். மசூதிகள், ஹிஜாப் ஆகியவற்றை வைத்து முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகின்றனர். இதை சம்பந்தப்பட்ட சமூகத்தினர் எதிர்க்க வேண்டும் என்று ஒவைஸி பேசினார்.







