மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் ஷெனாய் இசை!

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் பெரும்பாலும் சோகப்பாடல்களில் இடம்பெற்ற ஷெனாய் இசையை, மகிழ்வான நிலையிலும் பாடும் வரிகளுக்கேற்ப இணைத்துத் தந்திருப்பார் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன். கிட்டார் இசையைப்போல் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் வெகுவாக பயன்படுத்திய…

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் பெரும்பாலும் சோகப்பாடல்களில் இடம்பெற்ற ஷெனாய் இசையை, மகிழ்வான நிலையிலும் பாடும் வரிகளுக்கேற்ப இணைத்துத் தந்திருப்பார் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்.

கிட்டார் இசையைப்போல் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் வெகுவாக பயன்படுத்திய மற்றொரு இசைக்கருவி ஷெனாய். அவரது குழுவில் இடம்பெற்ற ஷெனாய் இசைக்கலைஞர் சத்யன், ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் என்ற பாடலில் பி.சுசிலாவின் கவர்ந்திழுக்கும் குரலில், உயிரோடு கலந்திடும் வகையில் ஷெனாய் இசை, இழையோடத் தந்திருப்பார்.

மதுரா நகரினில் தமிழ்ச்சங்கம் என்ற பாடலில் மங்கல இசை பொங்கும் வகையில் ஷெனாய் இசையை சிறப்பாகக் கையாண்டிருப்பார் மெல்லிசை மன்னர். கண்ணதாசன் – விஸ்வநாதன் கூட்டணியில் இணைந்த, மனம் கொள்ளை கொள்ளும் பாடல் அது. எதிர்காலத்தை வென்றவன் கண்ணன், காதலிலே அவன் மன்னன் என இயல்பான வரிகளில், ஷெனாய் இசை பொங்கிப் பிரவாகமெடுக்கும்.

துன்ப நிலையை விளக்கும் மாலைப்பொழுதின் மயக்கத்திலே பாடல் காட்சியில், வரிகளுக்கேற்ப மெல்லிய சோகத்தை வெளிப்படுத்தும் ஷெனாய் இசையைத் தந்திருப்பார் விஸ்வநாதன். ஷெனாய் இசைக்கலைஞர் சத்யன், நமது மனங்களை பிழியும் வகையில் வாசித்திருப்பார்.

ராமு திரைப்படத்தில் இடம்பெற்ற நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலில் கோடையில் ஒருநாள் மழை வரலாம் என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ என்ற வரிகளுக்கு முன்பும், அதன் பின்பும் வரும் ஷெனாய் இசையை ரசிக்காத மனமும் உண்டா எனக் கேட்கத் தூண்டும்.

சோகத்தில் இழையோடிய ஷெனாய் இசையை உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாடலில் உற்சாகம் கரைபுரளும் வகையில் மெல்லிசை மன்னர் ஒலிக்கச்செய்திருப்பார். பெண்களின் நாணத்தை வெளிப்படுத்தும் பாவத்திலும், உற்சாகமூட்டும் இசை என ஷெனாய் இசை மின்னலாடும். ஜெமினி கணேசன், பாரதி இருவரின் நடிப்பு, நடனம், முகபாவனை, உடல்மொழி சிறப்பாக அமைந்திருக்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.