அமைதியாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் மொத்தமாக 43.59% என்ற குறைந்த அளவிளான வாக்குகளே பதிவாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளுக்கான தேர்தல் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று(பிப் 19) நடந்து முடிந்தது. மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியோடு நிறைவுபெற்றது. இதில் மொத்த 12,838 வார்டுகள் அடக்கம்.
இந்த வார்டுகளுக்காக வாக்குப்பதிவுக்காக தமிழ்நாடு முழுவதும் 31,150 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் சென்னையில் மட்டும் 200 வார்டுகள் இருக்கின்றன. மேலும் 30,49532 ஆண் வாக்காளர்களும், 31,21951 பெண் வாக்காளர்கள் மற்றும் 1629 மூன்றாம் பாலினத்தை சேர்ந்த வாக்காளர்கள் சென்னையில் உள்ளனர். இந்த நிலையில் காலை தொடங்கிய வாக்குப்பதிவு மந்தமாகவே காணப்பட்டது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் காலை 9 மணி நிலவரப்படி 3.96% பதிவானது. இது தொடர்ந்து காலை 11 மணி நிலவரப்படி 17.88% வாக்குகளும் மதியம் 1 மணி நிலவரப்படி 23.42% வாக்குகளும் 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குகளும் பதிவாகின. மாலை 6 மணியோடு தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்த நிலையில் சென்னையில் மொத்தமாக 43.59% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
இதுவரை நடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுகளை ஒப்பிடும் போது இந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகவும் குறைவானதாக 43.59% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. காலை 11 மணி தொடர்ந்தே சென்னை பெருநகர மாநகராட்சியும் வாக்கு செலுத்துவது குறித்த அவசியத்தை எடுத்துரைத்தும் மொத்த வாக்குப்பதிவு குறைவாகவே இருப்பது மக்களுக்கு ஜனநாயகத்தின் மேல் இருக்கும் நம்பிக்கை குறைந்துவிட்டதாகவே காட்டுகிறது. தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 60.70% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று அறிவித்துள்ளது.
சென்னையில் குறைந்துவரும் வாக்குப் பதிவுக்கான காரணங்கள் கொரோனா பரவல், விழிப்புணர்வின்மை, மக்கள் அலட்சியம் என்று பல கூறப்பட்டாலும் நிதர்சனம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
குறைந்துவரும் வாக்குப் பதிவு;
2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமாக 71,79% வாக்குகள் பதிவாகின. இதில் குறைந்தபட்ச வாக்குப் பதிவாகச் சென்னையில் 59.40% வாக்குகள் பதிவாகின. மேலும் கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமாக 70.90% வாக்குகள் பதிவாகின. இதில் குறைந்த அளவாகச் சென்னையில் 57.43% வாக்குகள் பதிவாகின. இதற்கு முன்பாக நடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 73.76% வாக்குகள் பதிவாகின. இதிலும் குறைந்த பட்சமாக 55.27% வாக்குகளும் பதிவாகின.
கொரோனா தொற்று;
நாடு முழுவதும் கொரோனா தொற்று 3ம் அலை பரவத்தொடங்கி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் 2020ம் ஆண்டை போலவே மக்கள் அனைவரும் மருத்துவமனைகளை நாடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 2021ம் ஆண்டில் டிசம்பர் இறுதியில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகத் தொடங்கின. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் சற்றே குறைந்துவருகிறது. இருந்தாலும் அதன் தாக்கம் மக்களிடம் குறைந்ததாக தெரியவில்லை. 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கொரோனா பரவல் அதிகரித்ததும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் கைமீறிச் சென்றது. இதனால் இந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அச்சத்தால் வாக்களிக்கவில்லை என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. மருத்துவமனையிலிருந்த மக்கள் தேர்தலில் வாக்களித்துவிட்டு மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்ப மக்கள் விரும்பவில்லை என்று கருத்து தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மக்கள் அலட்சியம்;
எப்போதும் தேர்தல் என்றால் மக்களிடம் ஒரு அலட்சியமும் தொற்றிக்கொள்கிறது. ஆம், சட்டமன்றத் தேர்தலுக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை உள்ளாட்சித் தேர்தலுக்குக் கொடுப்பதில்லை. கவுன்சிலருக்கு வாக்களிப்பதா என்ற அலட்சியத்துடனும் இந்த தேர்தலை அணுகியதாகவே தெரிகிறது. சட்டமன்ற தேர்தலில் வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி தோல்வி பற்றி அவ்வளவாகக் கவனம் இல்லை என்பது தெரியவருகிறது. ஆம், என்னதான் மக்களவை தேர்தல், மாநிலங்களவைத் தேர்தல் ஜனநாயகத்தில் முக்கிய பங்கு வகித்தாலும் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்றால் உள்ளாட்சியில் நல்லாட்சி மலர வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
கடமையாற்றாத பிரபலங்கள்;
உள்ளாட்சித் தேர்தல் தொடங்கிய உடனேயே 7.15 மணிக்கே தனது வாக்கு சாவடிக்கு சென்று வாக்கினை நடிகர் விஜய் பதிவு செய்திருந்தார். ஆனால் சென்னையைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள் பலர் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை. குறிப்பாக ரஜினிகாந்த், அஜித் குமார், சிம்பு, தனுஷ், விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் வாக்களிக்கவில்லை. பலகோடி இளைஞர்களால் சிலாகிக்கப்படும் முக்கிய நடிகர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தாததும் பின்னடைவை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
ஜனநாயகத்தின் மீதான வெறுப்பு;
தேர்தலில் வாக்களித்தாலும் ஓட்டுக்கு காசு கொடுத்தவர்களே வெற்றி பெருகிறார்கள் என்றும் மாற்றம் ஏதும் இல்லை என்றும் மக்கள் ஏமாற்றமடைகிறார்கள் என்று கருத்து தெரிவிக்கின்றனர். 2011-ல் 53.67% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் 2022-ல் 43.65% மட்டுமே வாக்கு ஜனநாயகத்தின் மீது மக்கள் அடைந்துள்ள வெறுப்பைக் காட்டுகிறதாக பத்திரிகையாளர்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
வார்டுகளும் வாக்குகளும்;
43 வார்டுகளில் 40%-க்கும் கீழ் வாக்குகள் பதிவாகி உள்ளது. 104 வார்டுகளில் 40% முதல் 50% வரை வாக்குகள் பதிவாகி உள்ளதுடன் 32 வார்டுகளில் 50% முதல் 60% வரையில் வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சொந்த ஊர் சென்ற மக்கள்;
உள்ளாட்சித் தேர்தலில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் நடந்திருந்தாலும் வாக்கு எண்ணிக்கை குறைந்தது ஏன் என அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு, மெத்தப்படித்தவர்கள், மெத்தை வீட்டில் இருப்பவர்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். அதை நிறைவேற்றுவது நம் கடமை. தேர்தலில் வாக்களிப்பது அவர்கள் கடமை என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் நேரத்தில் மக்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். பலர் வொர்க் ஃப்ரம் ஹோம் மூலமாக வீட்டிலிருந்து வேலை செய்வதாலும் வாக்குப் பதிவு குறைந்துள்ளது என்று தெரிவித்தார். உண்மையில் சென்னை மக்கள் வெளிநாடுகளில் வேலை செய்துவருவதும், பலர் வொர்க் ஃப்ரம் ஹோம் காரணமாக பூர்வமாக இருந்த வீட்டிற்குச் சென்றுவிட்டதும் இந்த தேர்தல் வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
“அவமானப்படுத்திவிட வேண்டாம்”
நேற்று மதியம் 3 மணி அளவில் 23.42% வாக்குகள் மட்டுமே பதிவானதால், இதுகுறித்து பேசிய இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, “சென்னையில் குறைவான வாக்குப்பதிவு என்ற அவமானத்தை ஏற்படுத்திவிட வேண்டாம். தயவு செய்து இருக்கும் சிறிது நேரத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டின் தலைநகராக இருந்தும் ஆண்டாண்டு காலமாகவே வாக்கு செலுத்துவதில் பின் தங்கியே இருக்கும் சென்னை மக்கள் இந்த ஆண்டும் இதையே தொடர்ந்துள்ளது வருத்தமளிப்பதாக இருக்கிறது.
கட்டுரையாளர்: யுவராம் பரமசிவம்











