நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து மாவட்டம் வாரியாக நடைபெறும் விழாவில் தான் பங்கேற்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை கலைஞர் அரங்கில், திமுக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலையின் இல்ல திருமண விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாழ்த்துரை வழங்கினார். அப்போது, கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேரடி பரப்புரையை மேற்கொள்ளவில்லை எனக் கூறினார். நாளை மறுநாள் முடிவுகள் வெளிவரவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மகத்தான வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாவட்டம்தோறும் நடைபெறும் வெற்றி விழா கூட்டங்களில் தான் பங்கேற்க உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
திருமண விழாவில் பேசிய திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போன்று, ஒரு பிரதமர் வர வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புவதாகக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.








