யஷ்வந்த் சின்ஹா நாளை வேட்புமனு தாக்கல்–சரத் பவா் பங்கேற்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட உள்ள யஷ்வந்த் சின்ஹா, நாளை காலை 11.30 மணி அளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18ம்…

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட உள்ள யஷ்வந்த் சின்ஹா, நாளை காலை 11.30 மணி அளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். இவர் தனது வேட்புமனுவை, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட உள்ள எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா நாளை காலை 11.30 மணிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், கலந்து கொள்வதற்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று டெல்லி வந்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த யஷ்வந்த சின்ஹா, வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். கடந்த 2018ல் பாஜகவை விட்டு விலகிய அவர், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எனினும், பொதுவேட்பாளராக போட்டியிடும் நோக்கில் சமீபத்தில் அவர் அக்கட்சியில் இருந்தும் வெளியேறி உள்ளார்.

அவருக்கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்பட 17 கட்சிகள் ஆதரவளித்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.