பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முக்கே தங்கள் ஆதரவு என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியினத்தைச் சேர்ந்த வேட்பாளரான திரெளபதி முர்முவை ஆதரிப்பது என பகுஜன் சமாஜ் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, தங்கள் கட்சி பாஜகவை ஆதரிக்கிறது என்றோ, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை எதிர்க்கிறது என்றோ அர்த்தமல்ல என தெரிவித்துள்ள மாயாவதி, திறமையும் அர்ப்பணிப்பும் கொண்ட பழங்குடியின பெண் குடியரசுத் தலைவராக வேண்டும் என்ற தங்கள் கட்சியின் கொள்கையை மனதில் வைத்து எடுக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு தங்கள் கட்சியை மம்தா பானர்ஜியும் அழைக்கவில்லை என்றும், சரத் பவாரும் அழைக்கவில்லை என விமர்சித்த மாயாவதி, இது அவர்களின் ஜாதிய மனப்பான்மையையே காட்டுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 மக்களவை உறுப்பினர்களும், 3 மாநிலங்களவை உறுப்பினர்களும் உள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர்களில் இருவரின் பதவிக் காலம் ஜூலை 4ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது.










