பாலியல் புகாரில் பிரிஜ் பூஷனுக்கு இடைக்கால ஜாமின்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் வழக்கில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங்கிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன்…

மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் வழக்கில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங்கிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் 50 -க்கும் மேற்பட்ட தனியார் கல்வி மையங்களை நடத்தி வருகிறார். ஏற்கனவே 6 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். மேலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தவர். இவர் மீது பாலியல் புகார் தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மல்யுத்த வீரர்களும் போராடினர்.

அப்போது கடந்த மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்து, பின்னர் அவர்களை விடுவித்தனர். இதன் தொடர்ச்சியாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம் என்று மத்திய அரசுக்கு வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இதற்கு முன்னதாக, எனக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க கூட தயார் என பிரிஜ் பூஷன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் வழக்கில், பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகாரை, டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், இவ்வழக்கில் பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக கடந்த மாதம் 15-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து, பிரிஜ் பூஷன் சிங், முன்ஜாமீன் கேட்டு தொடர்ந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி ஹர்ஜீத் சிங் ஜஸ்பல் முன்பு வந்தது. அப்போது, பிரிஜ் பூஷனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டால், சாட்சியங்களை கலைக்க வாய்ப்புளளதால், ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து, பிரிஜ் பூஷனுக்கு 2 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், முன் ஜாமீன் மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெறும் என நீதிபதி அறிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.