சூழல் உணர்வு மண்டலம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வனவிலங்குகள் சரணாலயம் தேசியப் பூங்கா போன்றவற்றைச் சுற்றி 1 கி.மீ பரப்பில் சூழல் உணர்வு மண்டலம் என வரையறுத்து, அப்பகுதிகளிலிருந்து குடியிருப்புகள், விளை நிலங்கள் உள்ளிட்ட மனித நடமாட்டமுள்ள யாவற்றையும் அப்புறப்படுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக, தமிழகத்தில் நீலமலை – கூடலூர் பகுதியிலும் அதனையொட்டியுள்ள கேரளப் பகுதியிலும் நூற்றுக்கும் மேலான கிராமங்களைச் சார்ந்த எளிய மக்கள் தங்களின் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளையும் விளைநிலங்களையும் பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றன. இன்று கூடலூரில் கடையடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் -03 க்குள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். அதோடு இது குறித்து, சட்டமன்ற சிறப்பு அமர்வைக் கூட்டி உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் சட்டப்பூர்வமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க,இந்திய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக அறிக்கையில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.