அதிகாலையில் நடந்த கார் விபத்தில் ஓசூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மகன் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் எம்எல்ஏவுமான பிரகாஷின் மகன் கருணா சாகர் (24) தனது நண்பர்களுடன் சொகுசு காரில் பெங்களூரு சென்றார்.
அதிகாலை 2 மணி அளவில் பெங்களூரு அருகேயுள்ள கோரமங்கலா பகுதியில் அதி வேகமாக கார் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால், நடைபாதையின் மீது ஏறிய கார் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த ஓசூர் எம்எல்ஏ மகன் கருணாசாகர் உட்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் பயணம் செய்த 7 பேரும் சீட் பெல்ட் அணியாததால் ஏர் பேக் வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.









