புதுச்சேரியில் ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் தடையை மீறி மீன்பிடித்த
விவகாரத்தில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகுகளை தீ வைத்து கொளுத்திய பாஜக நிர்வாகி உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி அருகே உள்ள ஊசுட்டேரியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என இரு மாநில
அரசுகளுக்கும் சொந்தமான பகுதிகள் உள்ளது. ஊசுட்டேரி பகுதியானது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, பறவைகளை வேட்டையாடவும், மீன்பிடிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு புதுச்சேரிக்கு சொந்தமான பகுதியை சுற்றுலாத்துறை பராமரித்து, அரசு சார்பில் சுற்றுலாப்பயணிகளுக்கு படகு சவாரி நடத்தி வருகிறது.
இதனிடையே கடந்த 20ம் தேதியன்று அதிகாலை ஊசுட்டேரி கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ரூ.3 லட்சம் மதிப்பிலான 3 படகுகளை மர்ம நபர்கள் தீயிட்டு எரித்து விட்டு தப்பி ஓடினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இச்சம்பவம் தொடர்பாக வில்லியனூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், படகுகளை எரித்தது புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வாழபட்டாம்பாளையம் பகுதியை சார்ந்த மீன்சேகர் (எ)
குணசேகர், ரகு மற்றும் காளி ஆகிய மூன்று பேர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதில் மீன்சேகர் (எ) குணசேகர் விழுப்புரம் மாவட்ட பாஜக விவசாய அணி செயலாளராக உள்ளார். இதனையடுத்து போலீசார் ஏரிக்கரையில் மறைந்திருந்த மீன்சேகர் (எ) குணசேகர் மற்றும் ரகு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், தமிழக வனத்துறை அதிகாரிகள் ஊசுட்டேரி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, பாஜக விழுப்புரம் மாவட்ட விவசாய அணி செயலாளர் குணசேகர் தடையை மீறி ஊசுட்டேரியில் மீன் பிடித்து கொண்டிருந்ததால், அவருடைய வலைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அப்போது வனத்துறை அதிகாரிகளுக்கு குணசேகர் மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். மேலும் ஊசுட்டேரியில் ஆய்வு செய்வதற்காக தமிழக வனத்துறை அதிகாரிகளுக்கு, புதுச்சேரி சுற்றுலாத்துறை படகுகள் கொடுத்ததால், ஆத்திரத்தில் அந்த 3 படகுகளை குணசேகர் மற்றும் அவரது கூட்டாளிகள் தீவைத்து எரித்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்த நிலையில், தொடர்ந்து இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள காளியை தேடி வருகின்றனர்.