ஆஸ்திரேலியாவில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வானிலிருந்து பெய்த அந்த மழை பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது. கனமழை, பலத்த மழை, ஐஸ் கட்டி மழை என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இது என்ன மீன் மழை பெய்கிறதே என பொதுமக்கள் நம்ப முடியாத ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனார்கள். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும் என உணர்த்துவது போல் தரையெங்கும் மீன்களாக கொட்டிக் கிடந்தன.
ஆஸ்திரேலியாவின் லஜமானு என்கிற சிறிய நகரத்தில்தான் இந்த மீன் மழை அதிசயம் நிகழ்ந்துள்ளது. மீன் மழை பெய்து ஓய்ந்ததும் பொதுமக்கள் வீதிக்கு வந்து, வீதிகளில் சிதறிக் கிடந்த மீன்களை பெட்டி பெட்டியாகவும், கூடை, கூடையாகவும் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர். சிறியதும், பெரியதுமாக வானிலிருந்து கொட்டிய அந்த மீன்களில் பல உயிரோடு துள்ளிக்குதித்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மீன் மழை மக்களின் பசியாற்ற இறைவன் விண்ணிலிருந்து கொட்டியது என உள்ளூர் மக்கள் பலர் பேசிக்கொண்டாலும், இதற்கு பின்னால் உள்ள அறிவியலை குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த மீன் அருங்காட்சியக வல்லுநகர்கள் விளக்கினர்.
பொதுவாக டெர்னாடோ என்று அழைக்கப்படும் பெரும் சூறாவளி ஏற்படும் சமயங்களில் குளங்கள், ஏரிகள், உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள நீரையும், கடலில் உள்ள நீரையும் வாரிச்சுருட்டி எடுத்துச் செல்லும், அவ்வாறு எடுத்துச்செல்லப்படும்போது அந்த நீர் நிலைகளில் உள்ள மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களும் அந்த தண்ணீரோடு சேர்த்து சூறாவளியால் விண்ணுக்கு எடுத்துச் செல்லப்படும், இவ்வாறு மீன்களை உறிஞ்சி எடுத்துச் செல்லும் டொர்னாடோ சிறிது நேரத்தில் வலுவிழக்கும்போது மீன்கள் மீது அதன் பிடிமானம் தளர்ந்து அவை வானிலிருந்து கொட்டும், இதையே மீன் மழை என்று அழைப்பார்கள் என்று விளக்கம் அளித்தனர் குயின்ஸ்லாந்து அருங்காட்சியக வல்லுநர்கள். லஜமானு பகுதியில் மீன் மழை பெய்யும்போது பெரும் சூறாவளி அடித்ததையும் உள்ளூர் மக்கள் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் லஜமானு பகுதியில் இதுபோன்று மீன் மழை பெய்வது இது முதல்முறையல்ல, கடந்த 2010ம் ஆண்டும் இது போன்று மீன் மழை பெய்துள்ளது. அதற்கு முன்பு 2004ம் ஆண்டிலும் 1974ம் ஆண்டிலும் மீன் மழை பெய்ததாக லஜமானு பகுதியில் நீண்ட காலம் வசிக்கும் மக்கள் நினைவு கூறுகின்றனர். இந்தியாவிலும் கேரளா, தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் இதுபோன்று மீன் மழை பெய்துள்ளது. தெலங்கானாவின் ஜாக்டியால் பகுதியில் கடந்த ஆண்டு பெய்த மீன் மழையை கேள்விப்பட்டு பிற மாநில மக்களும் ஆச்சர்யம் அடைந்தனர்.
சூறாவளிக் காற்றின் வேகம் மீன்களை மட்டுமல்ல, தவளைகள், சிறிய பறவைகளைக் கூட விண்ணுக்கு ஈர்த்துச் சென்றுவிடும். இப்படி தவளைகள் டொர்னாடோ சூறாவளியால் விண்ணில் ஈர்த்துச் செல்லப்பட்டதன் எதிரொலியாக கடந்த 2005ம் ஆண்டு செர்பியாவின் ஒட்சாஸி என்கிற சிறிய நகரத்தில் தவளை மழை பெய்துள்ளது. இதே போல புழுக்கள் மழை, சிலந்தி மழை போன்றவை பெய்த அதிசயங்கள் எல்லாம் உலகில் நிகழ்ந்துள்ளன.