அக்னிவீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு! – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

4 ஆண்டு பணி நிறைவடையும் அக்னிவீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி அறிவித்துள்ளார்.

இந்திய ஆயுதப்படைகளை இளமையானதாகவும், போர் நடவடிக்கைகளுக்குத் தயாரானதாகவும் மாற்றும் நோக்கில், மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி, ராணுவத்தில் அதிகாரி அந்தஸ்துக்குக் கீழ் உள்ள பணியிடங்களுக்கு அக்னிவீரர்கள் 4 ஆண்டுகளுக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். அக்னிபத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதலே அரசியல் ரீதியாகப் பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி வந்தது.

25 சதவீதம் பேர் நிரந்தரப் பணி!

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் அக்னிவீரர்களாகப் பணியாற்றுபவர்கள் 4 ஆண்டுகள் பணி நிறைவு செய்த பின்னர், அவர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தரப் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீதமுள்ள 75 சதவீத அக்னிவீரர்களுக்கும் மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி இன்று (நவ.4) வெளியிட்ட அறிவிப்பில், “ஆரம்பகட்ட 4 ஆண்டு பணிக்காலத்தை நிறைவு செய்யும் அக்னிவீரர்களில் 25 சதவீதம் பேர் நிரந்தர வீரர்களாகப் பணியில் சேர்க்கப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவீத வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க பாதுகாப்புப் படைகள் பரிந்துரைத்தன. இதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது” என்றார். மேலும், இந்த 2 ஆண்டு கூடுதல் பணிக்காலத்தை நிறைவு செய்த பிறகு, ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற விரும்பும் அக்னிவீரர்கள் அனைவரும் தகுதித் தேர்வு மற்றும் புறநிலையான தேர்வு அளவுகோல்களின் அடிப்படையில் ஆயுதப்படைகளில் நிரந்தரமாகச் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

டிசம்பர் 31-க்குள் 18,300 பேர் வெளியேற இருந்தனர்!

அக்னிபத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாகப் பணியில் சேர்ந்த அக்னிவீரர்களின் 4 ஆண்டு பணிக்காலம் முடிவடைவதால், அவர்களில் 75 சதவீதம் பேரை நவம்பர் மாத மத்தியில் இருந்து படிப்படியாக விடுவிக்க மூன்று படைகளும் திட்டமிட்டிருந்தன. அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் 18,300-க்கும் மேற்பட்ட அக்னிவீரர்கள் தங்களது 4 ஆண்டு பணிக்காலத்தை நிறைவு செய்து ஆயுதப்படைகளில் இருந்து வெளியேற இருந்தனர். தற்போதைய அமைச்சரவை முடிவால், அவர்களுக்குக் கூடுதல் 2 ஆண்டுகள் பணியாற்ற
வாய்ப்பு கிடைத்துள்ளது.

முதல் கட்டத்தில் 24,400 பேர் தேர்வு!

கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அக்னிபத் திட்டத்தின் முதல் கட்ட ஆட்சேர்ப்பில் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய மூன்று படைகளிலும் மொத்தம் சுமார் 24,400 பேர் அக்னிவீரர்களாகச் சேர்க்கப்பட்டனர். இதில் ராணுவத்தில் சுமார் 19,000 பேரும், விமானப்படையில் 2,850 பேரும், கடற்படையில் 2,550 பேரும் இடம்பெற்றிருந்தனர். இந்த முதல் கட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களில் நான்கில் மூன்று பங்கு வீரர்கள்தான் இந்த ஆண்டு பணியில் இருந்து வெளியேற இருந்தனர்.

சிறப்புத் திறன் கொண்ட வீரர்களுக்கு முக்கியத்துவம்!

அக்னிவீரர்களின் செயல்பாடுகள் பல்வேறு பணிகளில் திருப்திகரமாக இருப்பதாக மூன்று படைகளும் தெரிவித்துள்ளன. மேலும், சிறப்புத் திறன்களைக் கொண்ட அக்னிவீரர்களை அதிக எண்ணிக்கையில் நிரந்தரப் பணியில் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் எதிர்காலத்தில் இத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் ஏற்கெனவே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது ராணுவத்தில் சுமார் 2.70 லட்சம் அக்னிவீரர்களும், விமானப்படையில் சுமார் 27,000 பேரும், கடற்படையில் சுமார் 21,000 பேரும் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த ராணுவ ஆட்சேர்ப்பு முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அக்னிபத் திட்டத்தில், தற்போது மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.