தீபாவளி பண்டிகை : தாம்பரம் – திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தாம்பரம் – திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தாம்பரம் – திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, ரயில் எண் 06111 தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் நவம்பர் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், ரயில் எண் 06112 திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் நவம்பர் 9-ம் தேதி (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்குத் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்குத் தாம்பரத்தைச் சென்றடையும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை சாலை, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயில்களில் 8 குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டிகள், 7 குளிர்சாதன மூன்றடுக்கு எகனாமி பெட்டிகள், 3 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 2 சரக்கு மற்றும் பிரேக் வேன்கள் இணைக்கப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.