தமிழில் பெயர் பலகை: அபராதம் போதுமானதல்ல – உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது தீவிரமான நடவடிக்கை தேவைப்படுகிறது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு…

தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது தீவிரமான நடவடிக்கை தேவைப்படுகிறது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தீரன் திருமுருகன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் கூறப்பட்டதாவது: அரசாணைப்படி பெயர் பலகை வைக்காததற்காக ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக உள்ளது. கடந்த 2018-2022 வரை 6,074 கடைகளில் ரூ.4.58 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. உணவக சட்டப்படி 349 உணவகங்களிடம் இருந்து ரூ.32,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை முறையாக பின்பற்ற அவ்வப்போது ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இவ்வாறு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் தெரிவிக்கையில், ரூ.50 அபராதம் 1948ல் கொண்டுவரப்பட்டதாகவும் இதை தற்போதைய நிலைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும் எனவும் கூறப்பட்டது. மேலும், அபராதம் செலுத்திவிட்டு பெயர்பலகையில் மாற்றம் செய்வதில்லை என தெரிவிக்கப்பட்டது.

அண்மைச் செய்தி : ஜெர்மனியில் ஆரம்ப பள்ளி அருகே துப்பாக்கிச் சூடு

இதனையடுத்து நீதிபதிகள், அபராதம் போதுமானதல்ல தீவிரமான நடவடிக்கையும் தேவைப்படுகிறது என்று உத்தரவிட்டனர். மேலும், அபராதத்தை உயர்த்தி வசூலிக்கவும், தொடர்ந்து தமிழில் பெயர் பலகை மாற்றாதவர்கள் மீது மீது தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசின் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.