பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் மகேஷ் கொனேரு மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார்.
பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் கொனேரு. இவர் தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆரம்ப காலத்தில் செய்தி தொடர்பாளராகப் பணியாற்றினார். பின்னர் தயாரிப்பாளர் ஆனார். இவர் தனது ஈஸ்ட்கோஸ்ட் புரொடக்ஷன்ஸ் மூலம் கல்யாண்ராம் நடித்த ’118’, கீர்த்தி சுரேஷ் நடித்த, ‘மிஸ் இண்டியா’, சத்யதேவ் நடித்த ’திம்மரசு’ உட்பட சில படங்களைத் தயாரித்துள்ளார்.
பிரமாண்ட ‘பாகுபலி’ படத்துக்கு விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றிய இவர், தமிழில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான பிகில் மற்றும் மாஸ்டர் படங்களை தெலுங்கில் டப் வெளியிட்டார். இதற்காக கடந்த ஜனவரி மாதம் நடிகர் விஜய்யை அவர் சந்தித்து பேசினார். அப்போது விஜய்யுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாயின.
விசாகப்பட்டினத்தில் இருந்த தயாரிப்பாளர் மகேஸுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் மறைவுக்கு நடிகை ராஷி கண்ணா உட்பட பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இன்னும் நம்ப முடியாத சூழலில், எனது நண்பர் மகேஷ் கொனேறு காலமாகிவிட்டார் என்கிற தகவலை பகிர்கிறேன். அதிக அதிர்ச்சியில் பேச்சின்றி இருக்கிறேன். அவர் குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.








