தஞ்சாவூர் அருகே இளைஞர் ஒருவர் தனது சொந்த செலவில், இதுவரை 66 ஆதரவற்ற ஏழைகளின் உடல்களை அடக்கம் செய்து சேவையாற்றி வருகிறார்.
கொரோனா பேரிடருக்கு பிறகு பல்வேறு தரப்பினரும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். சிலரது உதவிகள் வெளியே தெரியவருகிறது. பலரது உதவிகள் வெளியே தெரியவில்லை. ஆனால் அதன் மூலம் பலன் பெறுபவர்களின் மகிழ்ச்சியாக இருந்தால் போது என்ற எண்ணத்திலேயே இந்த உதவிகள் செய்யப்படுகின்றது.
அந்த வகையில் தஞ்சை அருகே இளைஞர் ஒருவர் தனது சொந்த செலவில் ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்து சேவையாற்றி வருகிறார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40). இவர் இதுவரை 66 ஆதரவற்ற ஏழைகளின் உடல்களை, யாருடைய எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அடக்கம் செய்துள்ளார்.
இந்நிலையில், அடக்கம் செய்வதற்கு ஏதுவாக தனது சொந்த செலவில் தற்போது மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் அமரர் ஊர்தி ஒன்றை வாங்கியுள்ளார். காந்தி ஜெயந்தியான இன்று அவர், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தனது பணி எப்போதும் தொடரும் என தெரிவித்துள்ளார். இவரது சேவையை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
-இரா.நம்பிராஜன்








