கொரோனா தொற்று காலத்தில், டிஜிட்டல் இந்தியா திட்டம் பெரும்பலனை அளித்துள்ளது, என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாட்டு மக்களிடம் “மன் கி பாத்” வானொலி நிகழ்ச்சி மூலம், அவர் இன்று பேசியபோது இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத மோசமான சவாலை உலகம் சந்தித்து இருக்கிறது என்றும், இந்த பெரும் தொற்று காலத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரான இரு புயல்களை, நாம் வெற்றிகரமாக சமாளித்து உள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் தன்னலமற்ற வகையில் இரவு பகலாக மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர் என பாராட்டிய பிரதமர், கொரோனா இரண்டாது அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த இவர்களின் முழு பணியும், ஒத்துழைப்பும் பெரும் உதவியாக இருக்கிறது, என்றும் தெரிவித்தார்.
நாட்டில் இதுவரை 33 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்த பிரதமர் மோடி. கொரோனா பெரும் தொற்று காலத்திலும், நமது நாட்டின் வேளாண்துறை வேகமாக வளர்ந்து வருகிறது, பல பகுதிகளில் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைத்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் இந்தியா திட்டம் மிக வேகமாக முன்னேறி வருவதாகவும், தற்போது கொரோனா தொற்று காலத்தில் பெரும் பலனை அளித்துள்ளது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.







