அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் மோசடி செய்த ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் நடத்திய சோதனையில் 1.5 கோடி ரொக்கம் 40 சவரன் தங்கம் ஒரு கார் உள்ளிட்ட பல ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
வேலூரை தலைமை இடமாகக் கொண்டு பல்வேறு கிளைகளைக் கொண்டு இயங்கிய நிதி நிறுவனம் எல்என்எஸ் இன்டர்நேஷனல் பினான்சியல் சர்வீசஸ். இந்த நிறுவனம் ஒரு லட்ச ரூபாய்க்கு 8,000 ரூபாய் வட்டி தருவதாகக் கூறியதை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். பின்னர், 10 சதவீத வட்டி தருவதாக பொய்யாக வாக்குறுதி அளித்து பொதுமக்களுக்குப் பணம் தராமல் மோசடி செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் மோசடி உள்ளிட்ட பிரிவிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக, இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, கோயம்புத்தூர் என மொத்தம் 21 இடங்களில் இன்று பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 220 ஆவணங்கள், ஹார்ட் டிஸ்குடன் கூடிய 13 கம்ப்யூட்டர், 5 லேப்டாப், ஒரு டேப், 14 செல்போன், 40 சவரன் தங்கம், ஒரு கார் மற்றும் 1.5 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தோர் பொருளாதார குற்றப் பிரிவின் ஈமெயில் ஐடியை தொடர்பு கொள்ளலாம் எனவும், ஆர்பிஐ அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனங்களில் மட்டுமே பொதுமக்கள் பணம் செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-ம.பவித்ரா








