தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை பெய்த கன மழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, திங்கள்கிழமை முதல் 6வது நாளாக இன்றும் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு நீடித்துள்ளது. இதனால், அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து உள்ளதால் இன்று காலை 10 மணிக்கு மேல் அருவிகளில் நீர்வரத்தைப் பொறுத்து சுற்றுலாப் பயணிகளை அருவிகளில் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
அதேபோல, தேனி மாவட்டம், பெரியகுளம் மேற்குத் தொடர்ச்சி மலை, கொடைக்கானல், வட்டக்கானல் பகுதியில் பெய்து வரும் கன மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் 10வது நாளாக குளிக்கத் தடை நீட்டிப்பு செய்து வனச்சரகர் டேவிட் ராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-ம.பவித்ரா








