நடிகை புகார் விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நடிகை புகார் விவகாரத்தில் சீமான் தரப்பு தனது மன்னிப்பு கோரிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரித்தது.

அப்போது விஜயலட்சுமி தரப்பு,  சீமான் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது திருமணம் செய்வதாக கூறிய உறுதியளித்தார். அதனடிப்படையில் இருவரும் இணைந்து இருந்தோம். ஆனால் அதன் பின்பு குற்றம் சாட்டப்பட்ட நபர் தன்னை கைவிட்டார்.  பின்னர் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார். இதனை அடிப்படையாகக் கொண்டு சீமான் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக தன்னைக் குறித்து அவதூறாகவும் பேசி வருகிறார். இந்த விவகாரத்தில் கூடுதலாக ஒரு மனுவை தாக்கல் செய்கிறோம் சம்பந்தப்பட்ட நபர் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அவதூறாக பேசுவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள்,  இந்த விவகாரத்தில் முதலில் சீமான் தரப்பு தனது மன்னிப்பு கோரிய மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் சீமான் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிய  மனுவை நாங்கள் ஏற்க மாட்டோம். மேலும் ஏற்கனவே விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்ற அந்த இடைக்கால உத்தரவை அடுத்த விசாரணை வரை நீட்டிக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கு மீதான விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.