”காணாமல் போன பிள்ளை மீண்டும் தனது தாயிடம் வந்து சேரும்போது, அந்த தாய் எத்தனை மகிழ்ச்சி அடைவாளோ அவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன்” சேடப்பட்டி முத்தையா மீண்டும் திமுகவில் இணைந்தபோது அந்த மகிழ்ச்சியை இப்படித்தான் வெளிப்படுத்தினார் கருணாநிதி. அந்த அளவிற்கு அரசியலில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக்கொண்டவர் சேடப்பட்டியார் என தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அன்போடு அழைக்கப்படும் சேடப்பட்டி ஆர்.முத்தையா, அரசியலில் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்டு, எம்.ஜி.ஆரால் அரவணைக்கப்பட்டு, ஜெயலலிதாவால் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட சேடப்பட்டி முத்தையா, தனது அரசியல் வாழ்க்கையின் பால பாடத்தை மாணவர் பருவத்திலேயே கற்றுவிட்டார்.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்படி ஒன்றியத்தில் உள்ள முத்தப்பன்பட்டியில் 1945ம் ஆண்டு பிறந்த சேடப்பட்டி முத்தையா, திமுகவில் மாணவர் பேரவை தலைவராக தனது பொது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்று அண்ணா, கருணாநிதியின் கவனத்தை ஈர்த்து திமுகவில் வேகமாக வளர்ந்து வந்த அவர், அங்கு முக்கிய பொறுப்புகளை அடையும் நிலையை எட்டினார். எனினும் எம்.ஜி.ஆரின் மீது கொண்ட பற்றும் பாசமும், அவரை திமுகவிலிருந்து அதிமுகவிற்கு அழைத்து வந்தது. 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியபோது அவருடன் கரம்கோர்த்த சேடப்பட்டி முத்தையா பல்வேறு சவால்களை மீறி மதுரை மாவட்டத்தில் அதிமுகவிற்கு வலுவான அடித்தளம் போட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுக முதல் முறையாக சந்தித்த தேர்தலான திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என எம்.ஜி.ஆர். யோசித்தபோது அவரது மனதில் முதலில் தோன்றியவர் சேடப்பட்டி முத்தையாதான். ஆனால் சில காரணங்களால் சேடப்பட்டியாருக்கு அந்த வாய்ப்பு கைகூடவில்லை. எனினும் எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையாக அதிமுகவில் வலம் வந்த அவருக்கு அக்கட்சியில் தனி மரியாதை இருந்தது. நாவலர் நெடுஞ்செழியன், காளிமுத்து…என்கிற வரிசையில் பேரைக்கேட்டாலே பொதுக்கூட்ட மேடைகளை அதிரவைக்கும் நாவன்மை மிக்க பேச்சாளராகவும் அதிமுகவில் தனக்கென தனி இடத்தை பெற்றார் சேடப்பட்டி முத்தையா.
தனது பெயரோடு ஒட்டிப்போன சேடப்பட்டி தொகுதியில் 1977, 1980, 1984ம் ஆண்டு தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்று ஹாட்ரிக் அடித்த சேடப்பட்டி முத்தையாவுக்கு, 1991ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நான்காவது முறையாக வெற்றியை கொடுத்து சட்டப்பேரவைக்கு அனுப்பிவைத்தது சேடப்பட்டி தொகுதி. 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் பிளவுபட்ட அதிமுக 1989ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஒன்றிணைந்தது. முடங்கிக் கிடந்த இரட்டை இலை மீண்டும் உயிர்பெற்றதன் எதிரொலியாக 1989ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்றது அதிமுக. ஜெயலலிதாவின் அரசியல் எழுச்சியின் அறிகுறியாக அமைந்த இந்த தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வென்றது. பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சேடப்பட்டி முத்தையா, 2,21,404 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தார்.
1991ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வென்று ஜெயலலிதா முதலமைச்சர் ஆனபோது அதிமுகவில் இனி ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை அவரது சாம்ராஜ்யம்தான் என்பது உறுதியானது. அந்த சாம்ராஜ்யத்தில் ஜெயலலிதாவால் அவருக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்பட்ட அதிமுக தலைவர்களில் சேடப்பட்டி முத்தையாவும் ஒருவர். 1991ம் ஆண்டு சேடப்பட்டி தொகுதியிலிருந்து 4வது முறையாக வென்று வந்தவரை சட்டப்பேரவை சபாநாயகர் ஆக்கினார் ஜெயலலிதா. 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் சபாநாயகராக பதவி வகித்த சேடப்பட்டி முத்தையாவிற்கு பேரவை சட்டவிதிகளும் நுணுக்கங்களும் அத்துபடி. தமிழ்நாட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்க விவகாரம் எழுந்தபோது இந்த விவகாரத்தில் எது சரி, எது தவறு, அடுத்து என்ன நடக்கும் என ஊடகங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு சேடப்பட்டி முத்தையாவிடம் பேட்டி எடுத்தன.
1998ம் ஆண்டு மீண்டும் தேசிய அரசியலுக்கு பயணப்பட்டார் சேடப்பட்டியார். ஆனால் அந்த பயணமே அவருக்கு சோதனையாகவும் அமைந்தது. விசுவாசத்திற்கு மறுபெயர் சேடப்பட்டி முத்தையா என ஜெயலலிதாவால் புகழப்பட்டவர் அவராலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சேடப்பட்டி முத்தையாவை, மத்திய தரைவழிப்போக்குவரத்துத்துறை அமைச்சராக கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தினார் ஜெயலலிதா. ஆனால் பதவியேற்ற 21 நாட்களிலிலேயே மத்திய அமைச்சர் பதவி பறிபோன சோகம் சேடப்பட்டியாருக்கு நிகழ்ந்தது. ஊழல் குற்றச்சாட்டு எதிரொலியாக வாஜ்பாய் அரசு அவர் பதவி விலக வற்புறுத்தியது. இதையடுத்து முத்தையாவை பதவி விலகச் செய்தார் ஜெயலலிதா. அடுத்த ஓராண்டில் இன்னொரு சோதனையையும் எதிர்கொண்டார் சேடப்பட்டியார். வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஒரே ஆண்டில் ஜெயலலிதா வாபஸ் பெற்றபோது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கு கோரினார் வாஜ்பாய். அப்போது நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் சேடப்பட்டி முத்தையா வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக ஓட்டு எந்திரத்தில் காட்டியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டாலும், வாஜ்பாய் அரசை காப்பாற்ற திட்டமிட்டே சேடப்பட்டி முத்தையா இவ்வாறு நடந்துகொண்டதாக ஜெயலலிதாவின் சந்தேக பார்வைக்கு உள்ளானர். அதிமுகவின் பொருளாளர் பதவி வரை உயர்ந்தவர் இந்த சந்தேகம் எதிரொலியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டார்.
தொடர்ந்து தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த சேடப்பட்டி முத்தையா, 2008ம் ஆண்டு கருணாநிதி முன்னிலையில் தனது தாய்க்கழகமான திமுகவில் ஐக்கியமானார். அக்கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவராக பொறுப்பு வகித்து தனது அரசியல் அனுபவத்தை திமுகவின் வெற்றிகளுக்கு உரமாக்கினார். சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணி மாறன் திமுகவில் மதுரை புறநகர் தெற்கு மாவட்டக்கழகத்தின் செயலாளராக உள்ளார்.
4 முறை எம்.எல்.ஏவாக, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகராக, மத்திய அமைச்சராக, அதிமுகவின் பொருளாளராக அரசியலில் நீண்ட வலம் வந்த சேடப்பட்டி முத்தையா, மதுரை மாவட்ட அரசியலில் பலருக்கு குருவாகவும் திகழ்கிறார். அந்த வகையில் பெரியகுளம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலங்களில் அந்த ஊரைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அடையாளம் கண்டு, அதிமுகவில் அவரது வளர்ச்சிக்கு ஊக்கமளித்தார். ஓ.பன்னீர்செல்வத்தை முதலில் அதிமுக தலைமைக்கு அடையாளம் காட்டி அவரை பெரியகுளம் நகர அதிமுக செயலாளர் ஆக்கிய பெருமையும் சேடப்பட்டி முத்தையாவுக்கு உண்டு என்று கூறப்படுவதுண்டு. எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதாவோடு அரசியலில் பயணித்த தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சேடப்பட்டி முத்தையாவின் மறைவு, இரு திராவிட கழகங்களிலும் சோகத்தை நிரப்பியுள்ளது.
-எஸ்.இலட்சுமணன்