மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் தர்காவில் தினந்தோறும் ஏராளமானோர் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக மலைமீதுள்ள தர்காவில் ஆடு மற்றும் கோழியை உயிர்பலி கொடுக்கக் கூடாது என இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் திருப்பரங்குன்றம் மலையை காக்க, நாளை (பிப் .4) அறப்போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அமைப்பு அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதால் காவல்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர்.

இதனிடையே இந்து மற்றும் இசுலாமிய அமைப்புக்களை சார்ந்தோர் திருப்பரங்குன்றம் மலை குறித்து தங்கள் கோரிக்கை மற்றும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதனால் இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை உத்தரவு (163 BNSS) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி போராட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும், நாளையும் மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாநகரில் இன்று காலை 6 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

பொது அமைதியை சீர் குலைக்கும் வகையில் போராட்டங்கள், தர்ணா மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் தர்காவில் வழிபட தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.