ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அறிமுக அணிகளான லக்னோவும், குஜராத்தும் வெற்றி மற்றும் ரன்ரேட்களின் அடிப்படையில் முதல் இரு இடங்களில் இருந்தன.
இந்நிலையில், நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 150 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மொயீன் அலி 93 ரன்களை எடுத்தார்.
சஹல், ஒபெத் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 59 ரன்களையும், அஸ்வின் 40 ரன்களையும் எடுத்து ஆட்டத்தின் வெற்றிக்கு வித்திட்டனர்.
10வது தோல்வியுடன் சென்னை அணி இந்த சீசனில் இருந்து வெளியேறியது. புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தை பிடித்தது. புள்ளிப் பட்டியலில் 20 புள்ளிகளுடன் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. நேற்றைய வெற்றியின் மூலம் அதிக ரன்ரேட்டுடன் 3ஆவது இடத்திலிருந்து 2ஆவது இடத்துக்கு முன்னேறியது. 2ஆவது இடத்தில் இருந்த ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 18 புள்ளிகளுடன் 3ஆவது இடத்துக்கு வந்தது.








