தமிழ்நாடு அரசின் குரூப் 2, 2ஏ பிரிவில் காலியாக உள்ள 5,529 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு தொடங்கியது.
தமிழ்நாடு அரசின் குரூப் 2, 2ஏ பிரிவில் காலியாக உள்ள 5,529 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கியது. நேர்முகத் தேர்வு உள்ள 116 குரூப் 2 பதவியிடங்களுக்கும், நேர்முகத் தேர்வு இல்லாத 5,413 குரூப் 2ஏ இடங்களுக்கும் என மொத்தம் 5,529 இடங்களுக்கான தேர்வு மாநிலம் முழுவதும் 4,012 மையங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை 11,78,175 பேர் எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட மையங்களில் 1.15 லட்சம் பேர் எழுதுகின்றனர். காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை இத்தேர்வு நடைபெறவுள்ளது.
தேர்வுப்பணியில் 4,012 தலைமை கண்காணிப்பாளர்களும், 58,900 கண்காணிப்பாளர்களும், 323 பறக்கும் படையினரும், 993 மொபைல் டீமும், 6,400 பரிசோதனைக் குழு என மொத்தம் 71,000 பேர் ஈடுபட்டுள்ளனர். மேலும், சார் பதிவாளர், வேலைவாய்ப்பு அலுவலர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கும் தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் 161 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 218 தேர்வு கூடங்களில் 63,437 பேர் தேர்வு எழுதுகின்றனர். அங்கு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








