சட்டக் கல்வி இயக்ககத்திற்கு முழுநேர இயக்குநரை நியமிக்க எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

சட்டக் கல்வி இயக்ககத்திற்கு முழுநேர இயக்குநரை உடனடியாக நியமிக்க வேண்டும், புதிய நடைமுறைகளைக் காரணம் காட்டி நியமனத்தை தாமதப்படுத்தக்கூடாது என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டின் சட்டக் கல்வியை முறைப்படுத்தி, ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் உருவாக்கும் உன்னதப் பொறுப்பைக் கொண்ட சட்டக் கல்வி இயக்ககத்தின் தலைமைப் பொறுப்பு, நீண்டகாலமாக உரிய முறையில் நிரப்பப்படாமல் இருப்பது நிர்வாகச் சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது.

வேலூர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் முனைவர் இராஜேஸ்வரன் அவர்கள் பணிமூப்புப் பட்டியலில் முன்னணியில் உள்ள நிலையில் அவரை பொறுப்புக்கு நியமிக்காமல், அதற்கடுத்த பணி மூப்பு நிலையில் உள்ளவருக்கு தற்காலிகப் பொறுப்புகள் வழங்கப்படுவதும், அதில் நீதிமன்றத் தலையீடுகள் ஏற்படுவதும் சட்டக் கல்வி நிர்வாகத்தில் தேக்கநிலையை உருவாக்கியுள்ளது.

சிறப்பு விதிகளின்படி இரு மாதங்களில் முழுநேர இயக்குநர் நியமிக்கப்படுவார் என்று உயர்நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்ட போதிலும், அவசரகால விதியான பிரிவு 47(1)-ஐப் பயன்படுத்தி மீண்டும் தற்காலிக நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதை உயர்நீதிமன்றம் கண்டித்து இடைக்காலத் தடை விதித்ததும், அதைத் தொடர்ந்து அரசாணை திரும்பப் பெறப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.

எனவே, கடந்த 73 ஆண்டுகால பாரம்பரிய நடைமுறைகளைப் பின்பற்றி, சிறப்பு விதி 2(a)-இன்படி பணிமூப்புப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பட்டியல் சமூகத்தை சேர்ந்த முனைவர் இராஜேஸ்வரனை உடனடியாகச் சட்டக் கல்வி இயக்குநராக நியமித்துச் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.

பணிமூப்பில் மூத்த அதிகாரியை நியமிப்பதில் காலதாமதம் செய்வதும், புதிய நடைமுறைகளைக் காரணம் காட்டுவதும் சட்டத்தின் ஆட்சிக்கும் சமூக நீதிக்கும் உகந்ததல்ல. நீண்டகாலமாக இயக்குநர் இன்றி இயங்கும் அரசு சட்டக் கல்லூரிகளின் நிர்வாகத்தையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, அரசு வெளிப்படையான, தகுதியின் அடிப்படையிலான முழுநேர நியமனத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.