வேட்புமனுக்கள் பரிசீலனை: பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய்யின் வேட்புமனு ஏற்பு!

பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் விஜயின் வேட்புமனுக்களை ஏற்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக, சசிகலா – ராமதாஸ் அணி என 5 முனை போட்டி நிலவுகிறது.

இதன் காரணமாக கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு வரும் 9ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. அதன்படி, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், த.வெ.க. வேட்பாளர் வெங்கடரமணன், தருமபுரி சட்டசபை தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணியின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் திருச்சி கிழக்கில் போட்டியிட விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.